Close

வரலாறு

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்தது என்றும், திருப்பத்தூரை பல மன்னர்கள் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், திருப்பேரூர், திருவனபுரம் என பல பெயர்களில் திருப்பத்தூர் அழைக்கப்பட்டது என்றும், 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற என்ற பெயரை திருப்பத்தூர் என்று மாற்றி உள்ளதாகவும் ஒரு ஆராய்ச்சி தகவல் கூறுகிறது. திருப்பத்தூர் நகரம் ஜவ்வாது மலை, ஏலகிரி மலை என இரண்டு பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும். ஜவ்வாது மலை, இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், நீரோடைகள், காடுகள் என காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் ரம்மியமான மலையாகும். இம்மலையின் பீமன் அருவியும், அமிர்தி உயிரியல் பூங்காவும் சுற்றுலாத் தலங்களாக விளங்குகிறது. ஜவ்வாது மலையில் இருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டல நாகநதி ஆறு, மிருகண்டா நதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலைவாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மலையாளி என்ற பழங்குடி இனத்தவர்கள் ஆவர். இவர்களது முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். இம்மலை மிகச் சிறந்த சந்தன மரங்கள் விளையும் பூமி. இதனால் ஆசியாவிலேயே 2வது பெரிய சந்தனக் கிடங்கு திருப்பத்தூரில் அமைக்கப்பட்டது. சந்தனம் விளையும் ஜவ்வாது மலையை ஒட்டி அமைந்துள்ளதாலும், பெரிய சந்தனக் கிடங்கு உள்ளதாலும் திருப்பத்தூரை „சந்தன மாநகர்’ என அழைக்கப்படுவதும் உண்டு.

இம்மாவட்டத்திலுள்ள ஆம்பூர் நகரில் தயாரிக்கப்படும் “பிரியாணி” உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு தோல் தொழிற்சாலைகள் அதிகம் அமையப் பெற்று, அந்நியச் செலாவணி அதிகம் ஈட்டித் தருவதோடு மட்டுமல்லாமல், இங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வருகிறது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம், திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில், 1790ஆம் ஆண்டிலேயே திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் முதல் ஆட்சித் தலைவராக கிண்டர்ஸ்லே அவர்கள் நியமிக்கப்பட்டு, 3.4.1792 வரை அப்பொறுப்பில் இருந்தார்.

அதன் பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் தலைநகராக திருப்பத்தூர் இருந்தது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம், இன்று ரயில்வே நிலையமாக உள்ளது.